தமிழக நிதியமைச்சரின் ஆடியோ; திமுகவின் சொத்து பட்டியலுக்கு ஒப்புதல் வாக்குமூலம்: அண்ணாமலை கருத்து

இதில்,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,  நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ,  நடிகை நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படங்கள்: பு.க.பிரவீன் |
இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, நடிகை நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படங்கள்: பு.க.பிரவீன் |
Updated on
2 min read

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ, திமுகவின் சொத்து பட்டியலுக்கான ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது `மனதில் குரல்' நிகழ்ச்சி, சென்னை நடுக்குப்பம் பகுதி பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மனதின் குரல் நிகழ்ச்சியில், தமிழகத்தின் சிறப்புகளை பிரதமர் பாராட்டிய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பை, பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வெளியிட, சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த, முன்னாள் மாமன்ற அதிமுக உறுப்பினர் சசிகலா பாஜகவில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: பாஜகவைப் பொறுத்தவரை, முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பை, மாநிலத் தலைமையுடன் ஆலோசித்த பின்னரே, தேசிய தலைமை முடிவு செய்யும். அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் சந்திப்பில், நானும் பங்கேற்றேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றகருத்தை நானும், பழனிசாமியும் முன்வைத்தோம். தற்போது திமுகவுக்கு எதிரான இருக்கக்கூடிய மனநிலையை, வாக்குகளாக மாற்றி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக நாங்கள் பேசினோம்.

சென்னையில் நேற்று  பிரதமர் மோடியின்  `மனதின் குரல்'  100-வது நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது.
சென்னையில் நேற்று பிரதமர் மோடியின் `மனதின் குரல்' 100-வது நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது பேசவேண்டிய அவசியமில்லை. என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் குறித்து முடிவு செய்ய,மாநிலத் தலைவருக்கு அனுமதியில்லை.

எனக்கான பாதையை தேசியத் தலைவர்கள் தெளிவாக வரையறுத்துள்ளனர். தமிழகத்தில் அதிமுகபெரிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கூட்டணியின் முகம் என்பது, பிரதமரின் முகம். கூட்டணியில் அதிமுகவுக்கு இணையாக, பாஜகவுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

யார் ஊழல் செய்தாலும், ஊழலுக்கு எதிரான எங்களது நிலைப்பாடு எப்போதும் மாறாது. இதில் கட்சியோ, தலைவர்கள் பெயரோ தேவையில்லாதது. மெட்ரோ ரயில் டெண்டர் ஊழல் குறித்து, சிபிஐயிடம் புகார் அளித்துள்ளேன்.

தமிழக நிதியமைச்சர் ஆடியோவைப் பொறுத்தவரை, அவர் பேசியிருப்பது ஒப்புதல் வாக்குமூலம். இது எனது குரல் இல்லை என்று அவர் வழக்குத் தொடர்ந்தால், அசல் ஆடியோவை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம். பொதுநலன் கருதி, யாருடைய குரல் பதிவையும் வெளியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எங்களது புகாருக்கும், வருமான வரித் துறை சோதனைக்கும் தொடர்பில்லை. 6 நாட்கள் சோதனை நடைபெறும் சூழலில், போதிய ஆதாரம் உள்ளதாகவே தெரிகிறது. அமைச்சர் உதயநிதியின் நோட்டீஸையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவருக்குப் பணம் எங்கிருந்து வந்தது உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷைனா, மாநிலச் செயலாளர் சதீஷ்குமார், விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா, ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ரங்கா, மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in