

சென்னை: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், கடந்த ஏப். 28-ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்த முதல்வர், தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி, வருவாய், காவல், பள்ளிக்கல்வித் துறைகளில் பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில்எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட வருவாய்அலுவலர் பூவராகவனுக்குப் பதிலாக, ம.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதிக்குப் பதிலாக, கோ.கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் நகர காவல் துணைக்கண்காணிப்பாளர் பார்த்திபனும்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், திட்ட செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்று அரசு கருதுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.