

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாற்றின் கரையில் உள்ள முத்தாகவுண்டனூர் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான சுவாமி சிலைகள் உள்ளன என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
ஊத்தங்கரை அருகே பாம்பாற்றின் கரை அருகே உள்ள முத்தாகவுண்டனூர் கிராமத்தில் இடிந்த நிலையிலிருந்த சிவன் கோயிலை இடித்து விட்டு, புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
இடிந்த கோயிலில் இருந்த சிலைகள் புதிய கோயில் அருகே வைக்கப்பட்டுள்ளன. இச்சிலைகளை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இங்கு 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர்கள் காலத்து வட்டெழுத்து நடுகற்கள் இரண்டு உள்ளன. இதை வைத்து இங்குள்ள சிலைகளின் அமைப்பை ஆராய்ந்தபோது, இவை 1,000 ஆண்டுகள் பழமையான சிலைகள் எனத் தெரிய வருகிறது.
இங்குள்ள மகிஷாசூரமர்த்தினி சிலையில் பின் கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை பிடித்தவாறும், முன் கைகளில் சூலம் மூலம் எருமை உடல் கொண்ட அரக்கனை வதம் செய்யும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள விஷ்ணு துர்க்கை சிலையின் பின் கைகளில் சங்கு சக்கரம், முன் வலது கையில் அபய முத்திரையும், இடது கையை தொங்கவிட்டும் உள்ளது.
மேலும், உத்குடிகாசனத்தில் பிரம்ம சாஸ்தா அமர்ந்த நிலையில் உள்ள சிலையும் உள்ளது. சாஸ்தா என்னும் அய்யனார் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. அதேபோல, வட்ட வடிவ ஆவுடையார், சதுர ஆவுடையார், உடைந்த நந்தி சிலையும் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.