

சென்னை: கரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த 2014 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதத்துக்குள் பெறப்பட்ட கட்டிட அனுமதிகளுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டிடங்களுக்கான அனுமதி என்பது குறிப்பிட்டகால அளவுக்கு வழங்கப்படுகிறது. சில வகையான கட்டிடங்களுக்கு 3 ஆண்டுகளும், மற்ற கட்டிடங்களுக்கு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் கட்டிட அனுமதிகள் வழங்கப்படு கின்றன.
கரோனா காலத்தில்.. இந்நிலையில் கடந்த 2020,2021-ம் ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், கட்டிட அனுமதி பெற்ற காலத்துக்குள் கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் பணிகளை தொடர்வதிலும், முடிப்பு சான்றிதழ் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து கட்டுமான நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், 2014 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் கட்டிட அனுமதிகள் பெற்று, அதற்கான கால அவகாசம் முடிவடையும் கட்டிடங்களுக்கான அனுமதிகளுக்கு சிறப்பு நேர்வாக கருதி 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்று கடந்த 2022-ம்ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இருப்பினும், வங்கிக் கடன் பெறுவதில் சிக்கல்கள் எழுந்ததால், மீண்டும் சில நிறுவனங்கள் தமிழக அரசுக்கு இது தொடர்பான அறிவிப்பை தெளிவுபடுத்த கோரிக்கை விடுத்தன.
சுற்றறிக்கை: இதன் அடிப்படையில், நகர ஊரமைப்புத்துறை இயக்குநர் பி.கணேசன், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலத்தில் கட்டிட அனுமதி பெறப்பட்டிருந்தால் சிறப்பு நேர்வாக கருதி அவற்றுக்கு 2 ஆண்டுகள் கால நீட்டிப்பு தரலாம் என்று தெரிவித்துள்ளார்.