Published : 01 May 2023 04:00 AM
Last Updated : 01 May 2023 04:00 AM
கோவை: கோவையில் ரசாயன பவுடர் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச் செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 8 குழுக்களாக பிரிந்து, கடந்த 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பழக் கடைகள், குடோன்கள், அடைத்து வைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
பழம் விற்பனை தொடர்பாக 231 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள 575 கிலோ மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க எத்திலின் ரசாயன பவுடர் பாக்கெட் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இது தொடர்பாக 8 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு, 30 சில்லறை விற்பனைக் கடைகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் 22 நிறுவனங்கள், 135 விநியோகஸ்தர்கள் என மொத்தம் 157 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், முறையாக தண்ணீரை உற்பத்தி செய்யாத 4 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘மாம்பழம், சாத்துக்குடி, வாழைப்பழம் போன்ற பழ வகைகளை விரைவாக விற்க, கால்சியம் கார்பைடு கல், எத்திலின் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு பயன்படுத்து கின்றனர்.
இவற்றை தொடர்ந்து உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், வாந்தி,பேதி, நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். கரும்புச் சாறு உள்ளிட்ட அவ்வப்போது தயார் செய்து விற்பனை செய்யும் உணவு பொருட்களை அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக்கூடாது. அழுகிய,செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பயன்படுத்தக்கூடாது என விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும் போது, வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடு அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் சுகாதாரக் குறைபாடு காணப்பட்டால் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT