

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் மூன்று பேர் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு நடந்த தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
‘தூக்கு தண்டனை குறித்த சீராய்வு மனுவை நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும். தூக்கு தண்டனை குறித்த வழக்குகள் அனைத்தையும் சட்ட கமிஷன் பரிந்துரைப்படி, அரசியல் சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்டவை மனுவில் கோரப்பட்டிருந்தன.
கடந்த 2010-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் தாக்கூர், ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. செங்கோட்டை தாக்குதல், ராஜீவ் கொலையாளிகள் உள்ளிட்ட தூக்கு தண்டனை கைதிகளின் வழக்குகள் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கையும் அந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தருமபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் மூவரின் மனுவையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.