

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முதல்கட்ட மெட்ரோ வழித்தடத்தில் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிதாக 2,560 கண்காணிப்புக் கேமராக்களை நிறுவமெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்டம் நீட்டிப்பு திட்டத்துக்குப் பிறகு, விமானநிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடத்தில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சராசரியாக தினமும் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் நிலையம் வரும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவி, கண்காணிக்கப்படுகிறது. அவ்வப்போது பழுதான கேமராக்கள் மாற்றப்பட்டு, புதிய கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்நிலையில், முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் உள்ள 32 ரயில்நிலையங்களில் 2,560 கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், அரசினர்தோட்டம், எல்ஐசி, ஆயிரம்விளக்கு,ஏஜிடிஎம்எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், விமான நிலையம், பரங்கிமலை, கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் உட்பட 32 ரயில் நிலைங்களில் ரூ.25 கோடி செலவில் 2,560கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையத்திலும் 80 கண்காணிப்புக் கேமராக்கள் வரை பொருத்தத் திட்டமிட்டுள்ளோம். பழைய கேமராக்களுக்கு மாற்றாக, புதிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவை ரயில் நிலையங்களின் நுழைவுவாயில், உள்பகுதி, மக்கள் கூடும் இடம், வாகனங்கள் நிறுத்தும் பகுதி, மெட்ரோ ரயில்நிலைய வளாகம் ஆகிய இடங்களில் பொருத்தப்பட உள்ளன.
மேலும், சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, பரங்கிமலை, விமானநிலையம், மீனம்பாக்கம், ஆலந்தூர்,சைதாப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நிலையங்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விடுக்கப்பட்டது.
டாடாநிறுவனம் உட்பட 2 நிறுவனங்கள் பங்கேற்றன. விரைவில் ஒப்பந்தபுள்ளி இறுதிசெய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம்வழங்கப்படும். ஒராண்டுக்குள் 32 ரயில் நிலைங்களிலும் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்ட நீட்டிப்பு வழித்தடத்தில் உள்ள 9 நிலையங்களில், கடந்த ஆண்டுதான் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. எனவே, அங்கு புதிய கேமராக்கள் தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.