

சென்னை: சென்னை மாநகராட்சியில் பதவிக் காலத்தில் இறக்கும் கவுன்சிலர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி, ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், பதவிக் காலத்தில் இறக்கும் கவுன்சிலர்களுக்கு, கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கவுன்சிலர் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு நிர்ணயிப்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை.
மாநகராட்சி நிர்வாகமே முடிவெடுத்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்திருந்தது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டு 2023-24 பட்ஜெட்டில், பதவிக் காலத்தில் இறக்கும் கவுன்சிலர்களுக்கு, கவுன்சிலர் குடும்ப பாதுகாப்பு நிதிரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிதியை உயர்த்தி வழங்க மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் விதிப்பு: இந்த தொகையை பெற உரிமை கோருவோரிடம் அதற்கான கடிதம், மறைந்த கவுன்சிலரின் இறப்பு சான்று, வாரிசுதாரர் சான்றிதழ், மற்ற வாரிசுகளிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழ் மற்றும் முன்பண பற்றுச்சீட்டு ஆகியவற்றை கேட்டு பெறவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவ.24-ம் தேதி உயிரிழந்த காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாதின் (165-வதுவார்டு) மனைவி சுதா பிரசாத்துக்கும், கடந்த பிப்.16-ம் தேதி உயிரிழந்த திமுக கவுன்சிலர் வா.ஷீபாவின் (122-வது வார்டு) மகள் வா.சாந்திக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க மாநகராட்சி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்தொகையை வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.