

சென்னை: மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் 25,628 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்தில் கோ-ஆப்டெக்ஸில் சீருடை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 29,132 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸில் சீருடை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சீருடை வழங்குவது நடைமுறையில் உள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லையில், பள்ளிக் கல்வித்துறையின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களின்கீழ் இயங்கி வந்த 139 பள்ளிகள், கடந்த மார்ச் மாதம் முதல்சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25,628 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 55 லட்சத்தில் புதிய சீருடைகள் கோ-ஆப்டெக்ஸில் வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, 12 ஆயிரத்து 335 மாணவர்களுக்கு தலா ரூ.376 செலவிலும், 13 ஆயிரத்து 293 மாணவிகளுக்கு தலா ரூ.610 செலவிலும் 2 செட் சீருடைகள் வாங்கப்பட உள்ளது.