

சென்னை: போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தில் மீனவர்க ளுக்காக புதிதாக 130 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என நொச்சிகுப்பம் மீனவ கிராம சபையினர் தொடர்ந்து 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டம் நடத்திய குறிப்பிட்ட 4 பேர் மீது, மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்தும், வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் நேற்று மதியம் 30 பெண்கள் உட்பட 60 பேர் திடீரென மெரினா காமராஜர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்திய 60 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனைக் கண்டித்து, லூப் சாலையில், படகுகளை சாலையில் போட்டு மீனவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணி வீரர்களின் வாகனம், காமராஜர் சாலை வழியாக வந்தது. மீனவர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் இவர்களின் வாகனம் சிக்கியது. உடனடியாக போக்குவரத்து போலீஸார் அங்கு விரைந்து நெரிசலை சீர்படுத்தி உரிய நேரத்தில் அந்த வாகனத்தை மைதானத்துக்கு அனுப்பி வைத்தனர்.