Published : 01 May 2023 04:05 AM
Last Updated : 01 May 2023 04:05 AM
திருவண்ணாமலை: அதிமுகவை பாதுகாக்க அரசியல் களத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கர்நாடாகவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மே 2-ம் தேதி அறிவிக்கவுள்ளேன்.
மேலும், கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரை ஆதரித்து 2 நாட்கள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க இருக்கிறேன். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவின் நலனுக்கான நிபந்தனையாக உள்ளது. கர்நாடாகாவில் காலூன்றிக் கொண்டு தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் வெறுப்பு அரசியலை பாஜக விதைக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரிவினை வாதத்தை ஊக்கப்படுத்துகிறது.
எனவே, கர்நாடாகவில் பாஜக ஆட்சியை தூக்கி எறியவும், அப்புறப்படுத் தவும், இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். கர்நாடாகாவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ள தற்கு, அவர் விளக்கமளிக்க வேண்டும். அதிமுகவுக்கு நல்ல வாய்ப்பு உருவானது.
தனித்து இயங்கவும், தனித்தன்மையை பாதுகாப்பதற்கு, அதிமுகவை பாதுகாப்பதற்கு அரசியல் களத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். என்ன நெருக்கடியோ, சமரசம் செய்து கொண்டு பாஜகவுடன் கூட்டணியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதிப்படுத்தியுள்ளார். இது திமுக தலைமையிலான கூட்டணிக்கு நலன். மகிழ்ச்சிதான்.
அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல. அதிமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எல்லாம் அறிந்தும், தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக, தன்னை தற்காத்துக் கொள்வதற்காக, மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு பணிந்து, இந்த நிலைப்பாட்டை பழனிசாமி மேற் கொண்டிருக்கிறார்.
அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று ‘நீட்' விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை வரவேற்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT