

ஆயுள் கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்ற சட்டப் பிரிவை எதிர்த்து, நளினி தாக்கல் செய்துள்ள மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு 1998-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை 2000-வது ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதே வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோ ருக்கு விதிக்கப்பட்ட மரண தண்ட னையை உச்ச நீதிமன்றம் ஆயுளாக குறைத்தது. இதையடுத்து, இவர்கள் மூவர் உட்பட ஆயுள் கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவர்களின் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நளினி தனியாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய தண்டனைக் கைதி களை விடுவிக்க, மத்திய அரசின் அனுமதி தேவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435(1)(ஏ)-ன் படி மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு சட்ட விரோதமா னது. ஒரு வழக்கை விசாரித்து முடித்து தண்டனை வழங்கிய பிறகு அரசுத் தரப்புக்கு அதில் இடமில்லை. தண்டனைக் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435(1)(ஏ)-யை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் பினோ ஆஜராகினர். ‘தண்டனைக் கைதிகளை விடுவிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை’ என்று ராதாகிருஷ்ணன் வாதிட்டார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இம்மனு குறித்து வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு. மத்திய அரசைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் 2,200 ஆயுள் தண்டனைக் கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் நளினியை விடுவிக்க மறுக்கின்றனர். எனவே அந்தப் பிரிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.