Published : 30 Apr 2023 04:02 PM
Last Updated : 30 Apr 2023 04:02 PM

“என் கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்...” - ஜெயக்குமார்

ஜெயக்குமார் | கோப்புப்படம்

சென்னை: அதிமுக 6 ஆக உடைந்துவிட்டது; அதற்கு கவர்ச்சியான தலைமை இல்லை என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறி இருப்பதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் தமிழக பாஜக இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "தோழமை அடிப்படையில், கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார். சந்திப்புக்கு பின்னர், எங்கள் கட்சியின் சார்பில் யாரும் பாஜகவை விமர்சிக்கவில்லை. ஏன் எங்களுக்கு விமர்சிக்கத் தெரியாதா? அதிமுகவினரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், பாஜகவில் ஏன் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது? என்பதுதான் கேள்வி.

அந்த கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் கூறியிருந்தால் பரவாயில்லை, ஏதோ எங்களுக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறலாம். அக்கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், அதிமுகவின் தலைமை சரியில்லை. அதிமுக ஐந்து ஆறாக உடைந்து விட்டது என்று கூறியிருக்கிறார். அதிமுக என்ன ஐந்து ஆறாக உடைந்திருக்கிறதா? அதிமுகவின் கிளைக்கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒருமித்தக் கருத்துடன், ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி சிறப்பாக வழிநடத்தப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, கட்சி உடைந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். அவருக்கு பார்வைக் கோளாறு என்று நினைக்கிறேன். மஞ்சள்காமாலை உடையவர்களுக்குத்தான் இதுபோல தெரியும். அதுபோல் ஆகிவிட்டாரா எஸ்.ஆர். சேகர்? சரி அப்போது நான் கேட்கிறேன். இதெல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? இதை அண்ணாமலை தெளிவுப்படுத்த வேண்டும்.

அண்ணாமலை என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இனிமேல் இதுபோன்ற கருத்துகள் பாஜக தரப்பில் இருந்து வராது; கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எங்கள் கட்சியினரை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அவர் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை இவ்வாறு செய்யாவிட்டால், கட்சி அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்.

எனவே, அண்ணாமலை பகிரங்கமாக, "எங்கள் கட்சியின் பொருளாளர் எனக்குத் தெரியாமல் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார். அது தவறு. நான் அவரைக் கண்டிக்கிறேன்" என தமிழ்நாட்டிற்கு, ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால்தான் அண்ணாமலை மீது எங்களுக்கு சந்தேகம் இருக்காது. இல்லையென்றால், அண்ணாமலை சொல்லிதான் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார் என்று நாங்கள் நினைக்க வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.

கடந்த 27ம் தேதி எஸ்.ஆர். சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்தியில் 400 சீட்டுகளுக்கு மேல் பெற்று 3வது முறையாக வெற்றி பெறுவார் மோடி என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அதிமுகவுடன் 25 சீட் கொடுத்தாலே கூட்டணி. இல்லையேல் பாஜக தலைமையில் தனி கூட்டணி என தெரிவித்திருந்தார். மேலும், "மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார். அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x