

மதுரை: தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெறுகிறது.
மாம்பழத்தில் 120-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருந்தாலும், தமிழகத்தில் மல்கோவா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரம், பெங்களூரா (கிளிமூக்கு), அல்போன்சா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. மா மரங்களில் ஈக்கள், புழுக்களாலும், அசுவினி மற்றும் சிலந்தி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளாலும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.
இவை தவிர பழ அழுகல், பழ கழுத்து தண்டு அழுகல் போன்ற நோய்களாலும் ஆண்டுதோறும் 17.23 சதவீத அளவுக்கு சேதாரம் ஏற்படுகிறது. பழ ஈக்கள் மற்றும் பழ சேதாரங்கள் மூலம் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு மாம்பழங்களை சந்தைப் படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் பூக்கள் உதிர்வு, பனியில் பூக்கள் கருகுவது, பூச்சி, புழு தாக்குதல் ஆகியவை காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பருவகால மாற்றத்தால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு காப்பீடு இழப்பீடு வழங்குவது போல், மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மா உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது காலத்தின் கட்டாயம். இதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். அல்போன்சா மாம்பழ உற்பத்தியாளர் மற்றும் பிரபல ஏற்றுமதியாளர் மு.முருகேசன் கூறியதாவது: பருவ நிலை மாற்றத்தால் மா மரத்தில் பாதிப்பு ஏற்பட்டு காய்ப்பு திறன் இல்லாமல் போய்விட்டது.
தென்னைக்கு வெள்ளை ஈ நோய் தாக்குதல்போல் மா மரத்தில் பூச்சி, புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுபோ, வைரஸ் கிருமிகளாலும் மா-விற்கு பாதிப்பு ஏற்பட்டு காய்ப்பு திறன் இல்லாமல்போய் விடுகிறது. ஆகவே, மா உள்ளிட்ட பலன் தரும் மரங்களுக்கு காப்பீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை மாவட்ட துணை இயக்குநர் ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மாம்பழ உற்பத்தியில் 30-லிருந்து 40 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். புள்ளி விவரங்களோடு அறிக்கை அளிக்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, புள்ளியியல் துறை அடங்கிய குழுவினர் மூலம் கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ளோம். புள்ளிவிவரங்களை விரைவில் அரசுக்கு அனுப்பிவைப்போம். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.