Published : 30 Apr 2023 04:03 AM
Last Updated : 30 Apr 2023 04:03 AM
தூத்துக்குடி: சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது: ‘தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்.14-ம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரிலான ஓர் அவதூறு காணொலியை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டீர்கள்.
அந்த காணொலியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி பெயரை குறிப்பிட்டு, ‘அபிடவிட் படியான சொத்து மதிப்பு ரூ.30.33 கோடி மற்றும் கலைஞர் டிவி ரூ.800 கோடி மொத்த மதிப்பு ரூ.830.33 கோடி’ என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது. இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல அடிப்படை ஆதாரமற்றது, கற்பனையானது. மேலும் ஆவணங்களில், பதிவுகளில் இருப்பவற்றுக்கு முரண்பாடானது.
கலைஞர் டிவி: கனிமொழி எம்.பி. 10-2-2023 முதல் கலைஞர் டிவியில் எந்த பங்கும் பெற்றிருக்காத நிலையில், எவ்வித அடிப்படைத் தகவல்களையும் சரி பார்க்காமல் என் கட்சிக்காரரின் நற்பெயரைக் குலைப்பதை உள்நோக்கமாக கொண்டு இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில் அவர் மீதான மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 பிரிவுகளின் படி தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளீர்கள். உங்களது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் அவர் அளவிட முடியாத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு: அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்டதற்காக என் கட்சிக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த நோட்டீஸ் கண்ட 48 மணி நேரத்தில் அவதூறு வீடியோவை திரும்பப் பெற்றுக் கொண்டு, எனது கட்சிக் காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT