

திருப்பூர் / சென்னை: குடும்ப மறுமலர்ச்சிக்கு தான் மதிமுக என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வைகோவுக்கு மதிமுக மாநில அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, திருப்பூர் சு.துரைசாமி 6-வது முறையாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: கட்சி தொடங்கிய காலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிரான தங்கள் உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே லட்சக்கணக்கானோர் உங்களை ஆதரித்தனர்.
திமுகவில் தங்களுக்கு ஒரு இடர்பாடு வந்த போது, எந்த குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும், இன்று அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்கு தன்னிச்சையாக கழகத்தில் பொறுப்பு வழங்க முயற்சிக்கும் போது மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும், தங்களின் சந்தர்ப்பவாத அரசியலையும், கட்சியினரை மக்கள் எள்ளி நகையாட வைத்து விட்டது என்பதையும் தாங்கள் இன்னமும் உணராமல் உள்ளது வருந்தத்தக்க வேதனையான நிகழ்வே.
தங்கள் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் மேலும், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை, தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உட்கட்சி தேர்தலில் துரை வைகோவுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் கடிதத்துக்கு ஒரு சில தினங்களில் பதில் வரவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
‘குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'
திருப்பூர் துரைசாமியின் கடிதம் குறித்து மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது: கடந்த காலத்தில் திமுகவில் இருந்த போது அக்கட்சி தொழிற்சங்க சொத்துகளை அபகரித்ததாக திருப்பூர் துரைசாமி மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெற்றால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என தொடக்க காலத்தில் நடந்த ஆலோசனையின் போது அவர் வலியுறுத்தினார்.
தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை வர உள்ள நிலையில் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்துகிறார். அவரை பொறுத்தவரை பரபரப்பை உருவாக்க வேண்டும், கட்சியில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றார்.