Published : 30 Apr 2023 04:10 AM
Last Updated : 30 Apr 2023 04:10 AM
சென்னை: தமாகா இளைஞரணியின் 15-வது செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசியதாவது: தமாகா கடந்த 9 ஆண்டுகளாக பதவிகளில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளைச் செய்து வருகிறது. பல இடங்களில் கட்சியினர் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் வர இருக்கிறது. அதை மனதில் வைத்து கட்சி மீண்டும் உயிரோட்டம் பெற வேண்டும். அப்போதுதான் தேர்தலில் தமாகாவும், கூட்டணி வேட்பாளர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும். வரும் காலங்களில் தமாகாவுக்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களும், சட்டப்பேரவையில் எம்எல்ஏ.க்களும், தனி சின்னமும் இருக்க வேண்டும்.
அதை இலக்காக கொண்டு இளைஞரணியினர் உழைக்க வேண்டும். 2024 தேர்தலில் தமாகா - பாஜக - அதிமுக கூட்டணியின் 100 சதவீதம் வெற்றிக்கு பாடுபட வேண்டும். ஈரோட்டில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கூட்டத்தையும், அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழாவையும் சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்.
குடிமகன்களை காக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. இயந்திரம் மூலம் மது விற்கத் தொடங்கியுள்ளது. சட்டம் - ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது. இதைக் கண்டித்து மாவட்ட அளவில் கையெழுத்து இயக்கங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், 12 மணி நேரவேலை மசோதாவை ரத்து செய்ய வேண்டும். காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேஷ், பொதுச் செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், இளைஞரணி மாநில துணைத் தலைவர்கள் கார்த்தி, அபிராமி செந்தில்குமார், மயிலை அருண் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசும்போது, "மெரினாவில் தமிழகஅரசு நிறுவ உள்ள பேனா சின்னத்துக்கு விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் என நம்புகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT