

கண்டமனூர்: வறண்டு கிடக்கும் மூல வைகை ஆற்றை இரவு நேரங்களில் பலரும் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வருவதால் குற்றச் சம்பவங்கள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அரசரடி, இந்திராநகர், வெள்ளிமலை, புலிகாட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்திக்கிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட ஏராளமான வன கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது.
மழை, ஊற்று நீரைப் பொறுத்தே மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும். இதனால் ஆண்டின் பல மாதங்கள் மூல வைகை வறண்டே கிடக்கும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை, இந்த ஆற்றில் நீர்வரத்து இருந்தது. அதன் பிறகு மழையின்றி படிப்படியாக நீர்வரத்து குறைந்தது. சில வாரங்களாக மணல் வெளியாக காட்சி அளிக்கிறது. இந்த ஆறு வாலிப்பாறை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாகச் செல்கிறது.
தற்போது நீர்வரத்தின்றி இருக்கும் ஆற்றின் மணல் வெளியை சிலர் திறந்தவெளி ‘பார்' ஆக பயன்படுத்தி வருகின்றனர். இரவானதும் மது பாட்டில்களுடன் கூட்டம் கூட்டமாக கிராமங்களையொட்டிய ஆற்றுப் பகுதிக்குள் முகாமிடுகின்றனர். போதிய கண்காணிப்பு இல்லாத பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சில நேரங்களில் போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறது. காலி மது பாட்டில்களை ஆற்று மணல் வெளியில் உடைத்து வீசிச் செல்கின்றனர்.
இதுகுறித்து அய்யனார்புரத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், சாலைக்கு மிக அருகில் ஆறு உள்ளதால், இவ்வழியாக வருவோர் இரவில் எளிதாக அங்கு சென்று விடுகின்றனர். போதையில் சில நேரங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை கண்காணித்து, சம்பந்தப்பட்டோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.