Published : 05 Sep 2017 08:58 AM
Last Updated : 05 Sep 2017 08:58 AM

சென்னையில் இன்று முரசொலி பவள விழா : 11 ஆண்டுக்குப் பிறகு திமுக மேடையேறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - கூட்டணியில் இணைவாரா?

கடந்த 2006-ல் திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி'யின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா கடந்த ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், பலத்த மழை பெய்ததால் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை (செப்டம்பர் 5) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மெகா கூட்டணியில் மதிமுக போட்டியிட்டது. ஆனால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்படவே, கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் மதிமுக இணைந்தது. 2009 மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் மதிமுக நீடித்தது.

2011 பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய வைகோ, தேர்தலைப் புறக்கணித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி, 2016 பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள நலக் கூட்டணி என வைகோவின் அரசியல் பயணம் அமைந்தது. இந்நிலையில் தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். உடல்நிலை சரியில்லாத திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த அவர், இன்று நடைபெறவுள்ள முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. அவர் திமுக கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x