அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணி: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்கள் ஹரிஷ்குமார் (இடது) ரவிசெல்வம் (வலது)
கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்கள் ஹரிஷ்குமார் (இடது) ரவிசெல்வம் (வலது)
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி மாணவர்கள் 2 பேர் இன்று உயிரிழந்தனர்.

திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிடப் பணியில் புளியங்குளத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஹரிஷ்குமார் (15), பிளஸ்-2 முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்த ரவிசெல்வம் (17) ஆகியோர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

முதல் தளத்தில் பணிகள் முடிந்ததால் 2-வது தளத்திற்கு பொருட்களை இடமாற்றும்போது தற்காலிக மின் இணைப்பு பெட்டி கீழே விழுந்துள்ளது. அதை மாணவர்கள் ஹரிஷ் குமார் மற்றும் ரவிச்செல்வம் இருவரும் சேர்ந்து தூக்க முயன்றதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இரு மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அருகிலிருந்தவர்கள் மாணவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே மாணவர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த திருச்சுழி போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவர்கள் 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் இருந்த மாணவர்களை வேலைக்கு அமர்த்தியது யார்? என்பது குறித்தும், பாதுகாப்பு இல்லாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in