Published : 29 Apr 2023 04:15 PM
Last Updated : 29 Apr 2023 04:15 PM

‘ஆருத்ரா முறைகேட்டில் எனக்கு தொடர்பா?’ - 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

அண்ணாமலை (இடது) | ஆர்.எஸ்.பாரதி (வலது)

சென்னை: ‘தன்னைப் பற்றி ஊடகங்கள் முன்பு அவதூறான கருத்துகளைத் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடாக ரூ.500 கோடியே ஒரு ரூபாய் வழங்க வேணடும்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சார்பில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான ஆர்.சி.பால்கனகராஜன் அனுப்பியுள்ள நோட்டீஸில், "கடந்த ஏப்.14-ம் தேதி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதன்பின்னர் அன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினீர்கள்.

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு இடத்தில் ஆருத்ரா நிறுவன முறைகேடு தொடர்பாக பேசும்போது, பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரூ.84 கோடி நேரடியாக பெற்றதாக கூறினீர்கள். ஆனால், அதுதொடர்பாக மற்ற எந்த கருத்துகளையும் நீங்கள் தெரிவிக்கவில்லை. அண்ணாமலைக்கு யார் பணம் கொடுத்தது?, அவரது ஆதரவாளர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

இந்த தகவல், பொதுமக்கள் மற்றும் பாஜகவைச் சேர்ந்த சிலர் கூற, உங்களுக்கு தெரியவந்ததாகவும், இதனால்தான் பாஜக அலுவலகத்துக்கு வெளியே பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தியதாகவும் கூறினீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. திமுகவை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய அண்ணாமலைக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். ஆருத்ரா நிறுவத்திடம் இருந்து பணம் பெற்றதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உங்கள் கட்சியில் உள்ளவர்களைப் போன்று இல்லாமல், அரசியலில் உயரிய கொள்களையும், நன்னெறிகளையும் பின்பற்றுபவர் அண்ணாமலை. அவருக்கு ஆருத்ரா முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகவும், பணம் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனவே இதுதொடர்பாக நீங்கள் கூறிய கருத்துகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்புக் கேட்க தவறும்பட்சத்தில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். இல்லையென்றால், அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பிய விவகாரத்தில் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x