தமிழகத்தில் 100 பயிற்சி இடங்களுடன் 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநில அளவிலான அனைத்துதுணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், பயிற்சிப் பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிவில் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின்போது துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட 106 அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏஎஸ்வி என்ற பாம்புக்கடி மருந்தும், ஏஆர்வி என்ற நாய்க்கடி மருந்தும் கையிருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. மாரடைப்பினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க இதய பாதுகாப்பு மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தாய்-சேய் இறப்பு விகிதம் குறைப்பது போன்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் 500 மருத்துவமனைகளை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

கடைகளில் ஆய்வு

பழங்களை பழுக்க வைப்பதற்கு சில வியாபாரிகள் தடைசெய்யப்பட்ட ரசாயன முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடை காலம் என்பதால் போலியான குளிர்பானங்கள் பாட்டிலில் அடைத்து விற்பது என்பது காலங்காலமாக நடக்கிறது. அதனை முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க, மாவட்ட அலுவலர்கள் தங்களுடைய மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 செவிலியர் பயிற்சி கல்லூரிகள், 25 இடங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை 2 மாதங்களுக்கு முன் சந்தித்தபோது, தமிழகத்துக்கு 30 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுடனான கூட்டத்தில், தமிழகத்துக்கு 100 பயிற்சி இடங்களுடன் 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி ஆதாரத்தைப் பெற்ற பின், இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in