

சென்னை: டாக்டர் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என வரலாற்றில் இடம்பிடித்த முக்கியத் தலைவர்கள் பலரின் காலடித் தடம் பதித்த வி.பி.ராமன் குடும்பத்தாரின் லாயிட்ஸ் கார்னர் மாளிகை, நூற்றாண்டைக் கடந்து வரலாற்றுப் பொக்கிஷமாக காட்சியளிக்கிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த வி.பி.ராமனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் வசித்து வந்த ராயப்பேட்டை ‘லாயிட்ஸ் கார்னர்’ இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, வி.பி.ராமன் சாலை எனப் பெயரிட்டுக் கவுரவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
வி.பி.ராமன் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லம், சில தினங்களுக்கு முன் 100 வயதைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்த மாளிகையில் காலடித் தடம் பதித்த அரசியல் தலைவர்கள் ஏராளம். சந்தித்த வரலாறும் சுவாரசியமானவை.
1923 ஏப். 26-ல் ராயப்பேட்டை ஹைரோடு, லாயிட்ஸ் ரோடு சந்திப்பில் உருவான இந்த மாளிகைக்கு ‘லாயிட்ஸ் கார்னர்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி மகன் ஏ.வி.ராமன், இந்த மாளிகையின் சொந்தக்காரர். லண்டனில் ஹெல்த் அண்ட் சானிட்டரி படிப்பை முடித்து, சென்னை மாநகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றிய ஏ.வி.ராமன் - சுந்தரம் தம்பதியின் மகன் வி.பி.ராமன்.
1930-களில் இந்த மாளிகையில் இருந்து வங்காள விரிகுடா வரை, சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு தென்னை, வாழை, நெற்பயிர்கள் இருந்துள்ளன. இந்த இல்லத்தின் நான்கு மூலைகளிலும் உள்ள மாட மாளிகையும், கோபுரங்களும் கட்டிடக் கலையின் சிறப்பை விளக்கும். உள்ளே நுழைந்ததும் நம்மைக்குளிர்விக்கிறது ஏ.வி.ராமனால் நடப்பட்ட நாகலிங்க மரம். இந்த மரத்துக்கான நாற்று, ஏ.வி.ராமனின் நண்பர் ஜி.ஏ.நடேசனுக்கு மோதிலால் நேரு பரிசாக வழங்கியது.
தனது நண்பரான ராஜாஜி மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் ஏ.வி.ராமன். பின்னர், ‘மக்கள் ஆரோக்கியம்’ என்ற ஆங்கில இதழை நடத்துவதற்காக, தனது வீட்டின் ஒரு பகுதியை விற்றுள்ளார்.
சுதந்திரப் போராட்ட தலைவர்களை கைது செய்ய ஆங்கிலேய அதிகாரிகள் வாரன்ட் பிறப்பித்தனர். அப்போது, தலைவர்கள் பலர் தஞ்சமடைய, லாயிட்ஸ் கார்னரின் கதவுகளை துணிச்சலாகத் திறந்து விட்டவர் ஏ.வி.ராமன்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேலின் மூத்தசகோதரர் விட்டல் பாய் படேல், சேத் ஜம்னாலால் பஜாஜ், ஷங்கர்லால் பேங்கர் என பலருக்கும் இந்த மாளிகை அடைக்கலம் தந்துள்ளது.
முன்னாளில் ஏ.வி.ராமனுடன் ராஜாஜி, காமராஜர், ராம்நாத் கோயங்கா, அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜமன்னார், நீதிபதி அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோரும், பின்னாளில் அவரது மகன் வி.பி.ராமனுடன் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஈவிகே.சம்பத், செழியன், மதியழகன், நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் என பலரும் அரசியல் ரீதியிலான அறிவுசார் விவாதங்கள் நடத்திய முக்கிய அரங்கம் `லாயிட்ஸ் கார்னர்' இல்லம்.
அண்ணாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட வி.பி.ராமனுக்கு, எம்ஜிஆர், கருணாநிதி இருவருமே நண்பர்கள். திராவிட இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வி.பி.ராமன், மத்தியஅரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சட்டக் கல்லூரி துணைப் பேராசிரியர், பேரறிஞர் அண்ணாவின் ‘ஹோம் லேண்ட்’ என்ற ஆங்கில இதழின் துணை ஆசிரியர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
ராஜாஜி, அண்ணாவின் சந்திப்பால், 1967-ல் திமுக ஆட்சி அமைக்க அச்சாரமிட்டதும் லாயிட்ஸ் கார்னர் மாளிகைதான். புகழ்பெற்ற வயலின் கலைஞர் பாப்பா வெங்கட்ராமையா இந்த இல்லத்தில் வசித்தபோது, வாடகைக்குப் பதிலாக வி.பி.ராமனுக்கு இசையைக் கற்றுக்கொடுத்தார். கல்பாகம், செம்மங்குடி, பாலமுரளி, ராமநாதபுரம் கிருஷ்ணன், டி.கே.கோவிந்த ராவ், புல்லாங்குழல் மாலி, வீணா எஸ்.பாலச்சந்தர் போன்ற இசைக் கலைஞர்களின் அற்புதமான ரீங்கார நிகழ்வுகளுக்கு சாட்சியாகவும் இந்த மாளிகை திகழ்கிறது.
மேலும், வி.பி.ராமனின் நெருங்கிய நண்பர்களான கண்ணதாசன், எம்ஜிஆர், சிவாஜி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இங்குஅமர்ந்து, பல வெற்றிப் படங்களையும், பாடல்களையும் தந்துள்ளனர்.
வி.பி.ராமனின் மூத்த மகனும், மூத்த வழக்கறிஞருமான பி.எஸ்.ராமன், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்தவர். மற்றொரு மகன் மோகன் ராமன் திரைப்பட நடிகர். இளைய மகன் பி.ஆர்.ராமனும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு தசாப்தங்களுக்கு முன்பு வி.பி.ராமனால் நிறுவப்பட்ட சட்ட அலுவலகம், இன்றும் அவரது மகன்களால் வெற்றிகரமாகத் தொடர்கிறது. அரசியலைத் தாண்டி கிரிக்கெட், திரையுலகம், தொழில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் சந்திக்கும் இடமாகவும் இருந்தது லாயிட்ஸ் கார்னர் மாளிகை. நூற்றாண்டு கண்டு, வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழ்கிறது ராமன் குடும்பத்தாரின் இம்மாளிகை.