

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது, ஊழலில் ஈடுபட்டு வரும் 15 திமுக அமைச்சர்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
வட சென்னை தெற்கு (கிழக்கு)மாவட்டத்துக்கு உட்பட்ட, ராயபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, திரு.வி.க. நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிஅதிமுக நிர்வாகிகள், செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், கூட்டணியில் உள்ள பாஜகதலைவர்களை மரியாதை நிமித்தமாக டெல்லியில் சந்தித்தோம்.
அப்போது, தமிழகத்தில் நிலவும் கொலை உள்ளிட்ட குற்றங்கள், பேச்சுரிமை இல்லாத நிலை, ஊழல் என மினி எமர்ஜென்சி போன்ற அசாதாரண சூழல் நிலவுவது குறித்து தெரிவித்து, உரியநடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசிய ஆடியோவில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக கூறியிருப்பது தொடர்பாக மத்திய முகமைகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
மேலும், கடந்த 2 ஆண்டுதிமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டுவரும் 15 அமைச்சர்களின் பட்டியலையும் கொடுத்திருக்கிறோம். தக்க நடவடிக்கை எடுப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் கட்சியும், ஆட்சியும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு திட்டத்தை அறிவிப்பது, திரும்பப் பெறுவது எனதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், விரைவில் திமுக ஆட்சியை அகற்றி, அதிமுக ஆட்சியை கொண்டு வருவார்கள்.
பாஜக நிர்வாகிகள் அதிமுகவை விமர்சித்துள்ளனர். அவர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டிக்கவேண்டும். அவர் கண்டிக்காவிட்டால், நாங்கள் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கூட்டணி என்ற அடிப்படையில், விமர்சனங்களுக்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது தவறான செயல். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.