முதுமலையில் பாகனை தாக்கி கொன்றது வளர்ப்பு யானை: உணவளிக்க சென்றபோது பரிதாபம்

முதுமலையில் பாகனை தாக்கி கொன்றது வளர்ப்பு யானை: உணவளிக்க சென்றபோது பரிதாபம்
Updated on
2 min read

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மசினி, உணவளிக்கச் சென்ற பாகனை தாக்கிக் கொன்றதால், வனத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில், கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள் மற்றும் தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இங்குள்ள 28 யானைகளைப் பராமரிப்பதற்காக, 22 பாகன்கள், 12 உதவியாளர்கள் மற்றும் 21 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். தினந்தோறும் யானைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யானைக்கும், தனித்தனி பாகன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமில்தான் ஆஸ்கர் விருது வென்ற குறும்படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி ஆகிய இரண்டு யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் யானைகளுக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவு உருண்டைகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, யானைகளை நடைப்பயிற்சி, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு மசினி என்ற வளர்ப்பு யானையை, சி.எம்.பாலன் (54) என்ற பாகன் பல ஆண்டுகளாகப் பராமரித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல உணவு கொடுக்கச் சென்ற பாலனை, திடீரென யானை தாக்கிஉள்ளது. இதில் பலத்த காயமடைந்த பாலனை, மற்ற பாகன்கள் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே பாகன் உயிரிழந்தார். இது தொடர்பாக வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகன் பாலன்
பாகன் பாலன்

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா கூறும்போது, "அபயரண்யம் முகாமில் காலை 9.10 மணியளவில், மசினி (16) என்ற யானைக்கு, அதன் பாகன் பாலன் உணவளித்தார். அப்போது திடீரென யானை தாக்கியதில், பாகன்பலத்த காயமடைந்தார்.

அவரை பிற பாகன்கள் மற்றும் வனத் துறையினர் மீட்டு, கூடலூர் அரசுமருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பாகன் பாலனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஏற்கெனவே 2019-ல் சமயபுரம் கோயில் பாகனாக இருந்த கஜேந்திரனை, மசினி யானை தாக்கியதில் உயிரிழந்தார். அதன் பின்னரே மசினி யானை, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.10 லட்சம் நிவாரணம்: இதற்கிடையில், பாலன் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும்போது, ‘‘உயிரிழந்த பாலன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in