Published : 29 Apr 2023 06:09 AM
Last Updated : 29 Apr 2023 06:09 AM

பிரமாண பத்திரத்தில் சொத்து குறித்து தவறான தகவல் அளித்ததாக பழனிசாமி மீது புகார்: அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் மே 26-ம்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர். இவர் ஆன்லைன் மூலமாக, சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பிஉள்ளார்.

அதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது அசையா சொத்துகள், ஆண்டு வருமானம், கடன் விவரங்கள் உள்ளிட்டவற்றை தவறாகத் தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்த சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதித்துறை நடுவர் கலைவாணி, ‘‘மனுதாரரின் புகார் குறித்து சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து, உரிய ஆவணங்களை திரட்டி, முழு உண்மையையும் வெளிக்கொணர வேண்டும். இதுகுறித்த அறிக்கையை மே 26-ம்தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு சாட்சியம் அளிக்க மனுதாரர் வரும்போது, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x