

உதகை: பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உதகை அருகே பகல்கோடுமந்து கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. அங்கர்போர்டு அருகே புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பைக்காரா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (25) கைது செய்யப்பட்டார்.மேலும் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி கொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் தோடரின பெண்கள் நேற்று மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "மாணவி கொலையில் இன்னும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என கருதுகிறோம். ஆனால், போலீஸார் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். கொலையாளியை நாங்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தோம்.
கொலை நிகழ்ந்து 4 நாட்களாக எந்தவித தகவலும் போலீஸார் தெரிவிக்கவில்லை. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி மாணவிகளை அரசுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்வதில்லை.
கொலை செய்யப்பட்ட மாணவியை பேருந்தில் ஏற்றியிருந்தால், அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார். கூடலூர் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும், ஹெச்.பி.எஃப். பகுதியில் நிறுத்தி, பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இளைஞர்களிடம் போதை வஸ்துகள் தாராளமாக புழங்குகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
மேலும், தமிழக முதல்வருக்கு காங்கிரஸ் கட்சியின் பழங்குடியினர் பிரிவு மாநிலத் தலைவர் பிரியா நஸ்மிகர் அனுப்பியுள்ள கடிதத்தில் "உதகையில் பழங்குடியின பள்ளி மாணவி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
பெண்ணியத்தை போற்றி பாதுகாக்க வேண்டிய சமூகத்தில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வது வேதனையளிக்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.