Published : 29 Apr 2023 06:07 AM
Last Updated : 29 Apr 2023 06:07 AM
திருப்போரூர்/ காஞ்சி: கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் ஊராட்சியில் மரம் வெட்டும் தொழிலில் 11 சிறுவர்கள் உட்பட27 இருளர் மக்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஆ.ர, ராகுல்நாத்திடம் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதன்பேரில், செங்கை கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், திருப்போரூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பாலாம்மாள் நகரில் 7 பெரியவர்கள் மற்றும் 3 சிறுவர்களும் கோமான் நகரம் பகுதியில் 9 பெரியவர்களும் 8 சிறுவர்களும் என மொத்தம் 11 சிறுவர்கள், 6 பெண்கள் உட்பட 27 பேர் மரம் வெட்டுதொழிலில் கடந்த 6 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவர்களை மீட்டு செங்கல்பட்டு கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். இவர்கள் கல்பாக்கம், வேலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்கள் என்றும் வேலிகத்தான் மரம் வெட்டும் தொழிலுக்காக இங்கே கொத்தடிமைகளாக தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மீது வருவாய்த் துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோட்டாட்சியர் இப்ராஹிம் கூறும்போது, "கொத்தடிமைகளாக இருந்த 27 இருளர்மக்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.
காஞ்சி ஆட்சியர்: இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்துபுகார் தெரிவிக்க உதவி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பி.எஸ் என்.எல்.சார்பில் 155214 எண்ணும் கட்டணமில்லா உதவி தொலைபேசியான 18004252650 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மா. ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT