Published : 29 Apr 2023 06:45 AM
Last Updated : 29 Apr 2023 06:45 AM

கடந்த ஆண்டில் லாபம் ஈட்டிய கூட்டுறவு வங்கிகள்: பிற மாநிலங்கள் பாராட்டியதாக அமைச்சர் பெருமிதம்

சென்னை: கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலதலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் லாபமீட்டன. இதை அனைத்து மாநில கூட்டுறவுத் துறையினரும் பாராட்டியதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

தேசிய அளவிலான கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக கூட்டுறவுத் துறை சார்பில், `கிராமப்புற குறுகியகால கூட்டுறவு கடன் அமைப்புக்கான அமுதகாலம் மீதான தொலைநோக்குப் பார்வை' என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கைத் தொடங்கிவைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசும்போது, ``2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.

விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாற்றத் திறனாளிகள், கிராமப்புற கைவினைஞர்கள், பெண்கள் ஆகியோரின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், நலத் திட்டங்களை செயல்படுத்தின. கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது'' என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும், கிராமம் முதல் நகர்ப் பகுதிகள் வரை கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதை கருத்தரங்கின் தொடக்கத்தில் விளக்கினர்.

தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவை கடந்த 2 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகின்றன. இதற்காக, பிற மாநில கூட்டுறவுத் துறையினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களுக்கான திட்டங்களை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அறிவித்தார். இந்த திட்டங்களையும், அனைத்து மாநில அதிகாரிகளும் வரவேற்றனர் என்று அவர் கூறினார்.

தேசிய அளவிலான கூட்டுறவு வங்கிகளின் கூட்டமைப்புத் தலைவர் கொண்டரு ரவீந்தர் ராவ் கூறும்போது, ‘‘கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டதில் இருந்து 75 ஆண்டுகளாக, கிராமப்புற ஏழை மக்களுக்கான நிதி தேவைகளை பூர்த்தி செய்து வருன்றன. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கிஉள்ளது.

குறிப்பாக, உள்ளார்ந்த வளர்ச்சிமற்றும் கூட்டுறவுத் திட்டங்களில் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்தவும், சிறந்த நிர்வாகத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

கருத்தரங்கில், பிஹார் மாநில கூட்டுறவு விற்பனை ஒன்றியத் தலைவர் சுனில்குமார் சிங், குஜராத் கூட்டுறவுத் துறை தலைவர் திலீப் சங்கானி, கரீப்கோ தலைவர் சந்திரபால் சிங் யாதவ், தமிழக கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.சண்முகசுந்தரம், பதிவுத் துறை தலைவர் எம்.பி.சிவனருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x