

சென்னை: ஒப்பந்த நிறுவனம் முன்பணம்கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியம் தற்போது ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவர்களிடம் திருப்பித் தராத வகையில் ரூ.5 ஆயிரம் முன்பணம் கேட்டு தனியார் ஒப்பந்த நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், பல்கலைக்கழக நிர்வாக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.இதுதொடர்பாக தற்காலிக ஊழியர்கள் கூறியதாவது:
இதுவரை 2 நிறுவனங்கள் மாறிய நிலையில் கடந்த ஆண்டு தேர்வான ஒப்பந்த நிறுவனம், ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என நிர்பந்தம் செய்து வருகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.424 முதல் ரூ.486 வரை தினக்கூலி பெற்று பணிபுரிகிறோம். தொழில்வரி என்னும் பெயரில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்கிறார்கள்.
மேலும், வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யும் தொகை குறிப்பிட்ட காலத்துக்குள் பிஎப் கணக்கில் வரவு வைப்ப தில்லை. இதுதொடர்பாக பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.