

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் மே 14-ம் தேதி வரை நடைபெறும் “சென்னை விழா-2023”ஐ விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்வில், நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான சர்வதேச கைத்தறி துணிகள் மற்றும் பாரம்பரிய கைவினை பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவுக்கான அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இவ்விழா ரூ.1.50 கோடியில் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. கண்காட்சியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை 30 அரங்குகளில் கண்ணை கவரும் வகையில் காட்சிபடுத்தியுள்ளனர்.
இதுதவிர இந்தியாவில் உள்ள20 வெளிமாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், தங்களது படைப்புகளை 83 அரங்குகளிலும், தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டு சேலைகள், கைத்தறி கூட்டுறவுசங்கத்தின் கோ-ஆப்-டெக்ஸ் துணிவகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளிலும் இடம் பெற்றுள்ளன.
மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களின் சராஸ் மேளா விற்பனைக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மொத்தமாக சென்னை விழாவில் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் 30உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 10மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்க ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.