

சென்னை: சென்னை, மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்து தீவுக்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் பெயர் சூட்ட மாநகராட்சி மன்ற தீர்மானத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. அப்போது, 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள்:
* சென்னை மாநகராட்சி மறைந்த கவுன்சிலர்கள் ஷீபா, நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் ஆகியோரின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
* சென்னை, ராயபுரம், திரு.வி.நகர் மண்டலம், தேனாம்பேட்டை மண்டலத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கழிப்பறைகள் கட்டுதல் போன்ற பணிகளுக்கு தன்னாட்சி பொறியாளர் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
* சென்னை மெரினா கடற்கரை, ராஜாஜி சாலை மற்றும், காமராஜர் சாலை, திரு.வி.க.நகர் மண்டலத்தில் பிரகாசம் சாலை, எஸ்பிளனேடு சாலை பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.
* சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ஆயிரம் சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவுதிட்டுக்கு, இயக்குநர் கே.பாலச்சந்தர் சதுக்கம் அல்லது ரவுண்டானா அல்லது போக்குவரத்து தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
* கரோனா காலத்தில் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு உணவு வழங்கி நிறுவனத்திற்கு 3.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 25 ஆயிரத்து 628 மாணவர்களுக்கு, ‘கோ–ஆப்–டெக்ஸ்’ நிறுவனத்தில் 2.55 கோடி ரூபாய் மதிப்பில் சீருடை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதுபோன்ற 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.