

சென்னை: சென்னையில் நட்சத்திர விடுதிகள் சொத்துவரி ஏய்ப்பு செய்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று ஆணையர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் சொத்து வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கணக்குக்குழு தலைவர் தனசேகரன் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர்,"சென்னையில் உள்ள சில தனியார் நட்சத்திர விடுதிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சொத்து வரி ஏய்ப்பு செய்துள்ளன. குறிப்பிட்ட சில நட்சத்திர விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கி ஒரு மாதம் ஆகியும் பதில் அளிக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் துணையுடன் மொத்த பரப்பளவில் சதவீதம் குறைத்து கணக்கிட்டு முறைகேடாக சொத்து வரி வசூலித்ததால் மாநகராட்சிக்கு கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக ஆலந்தூரில் ரேடிசன் புளூ, விஜய் பார்க், துரைப்பாக்கம் பார்க் , ஹாலிடே இன், நோவா டெல், ஹபிலிஸ் ஓட்டல் போன்ற விடுதிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளன.
குறிப்பிட்ட தனியார் விடுதிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து நேரில் ஆய்வு செய்து முழு பரப்பளவு கணக்கிட்டு புதிய சொத்து வரி வசூலிக்க வேண்டும். கடந்த கால ஏய்ப்பு செய்த தொகையும் திரும்பப் பெற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அழுத்தத்தின் காரணமாக முறைகேடுக்கு துணைபோன அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி,"நட்சத்திர விடுதி, சினிமா தியேட்டர், மருத்துவமனை, திருமண மண்டபம் ஆகியவற்றிக்கு வணிக ரீதியாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிலவற்றுக்கு குறைத்தும், சில நிறுவனங்களுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு குழு அமைத்து முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.