நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகள்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், மா. கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
Updated on
1 min read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளுக்கு, சென்னை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகளை தமிழக அரசு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 (THE TAMIL NADU URBAN LOCAL BODIES RULES, 2023 ) என்ற பெயரில் இந்த புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் ராஜசேகர்,"நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தத்தினால், சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வார்டுகளில் திட்டங்கள் செயலாக்கத்தின் நிதி உச்ச வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு மாமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஆணையரே பணிகளை மேற்கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு மட்டும் மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. நிதி வரம்புகளின் சட்ட விதிகள் திருத்தத்தினால் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விதிகளில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், சட்டவிதிகள் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என மாமன்றத்தில் கோஷம் எழுப்பினர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உறுப்பினர் ஜெயராமன் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து, முதல்வர் மற்றும் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மேயர் பிரியா உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in