

சென்னை: நூற்றாண்டு பழமைமிக்க செட்டிநாடு குழுமம் சிமென்ட் தயாரிப்பு, போக்குவரத்து, ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இதில் ‘சவுத் இந்தியா கார்ப்பரேஷன்’, செட்டிநாடு குழும நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிறுவனம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமான டான்ஜெட்கோவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டுவந்துள்ளது. இதில் இந்நிறுவனம் டான்ஜெட்கோவிடம் முறைகேடாக கணக்கு காட்டி பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
2011 - 2019 காலகட்டம்: இதுதொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் டான்ஜெட்கோவுக்கு கோடிக்கணக்கான பணம் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த மோசடியில் டான்ஜெட்கோ அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி செட்டிநாடு குழும அலுவலகங்களிலும், டான்ஜெட்கோவின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அமலாக்கத் துறை கூறும்போது, “சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.360 கோடி நிரந்தர வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள், நில பத்திரங்கள் சிக்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
2011-2016 வரையிலான காலகட்டத்தில், விசாகப்பட்டினத்திலிருந்து நிலக்கரியை கப்பல் வழியாக தமிழகம் கொண்டுவர ரூ.1,267 கோடி செலவானதாக கணக்கு காட்டப்பட்டது. ஆனால், சவுத் இந்தியா கார்ப்பரேஷனுக்கு ரூ.239 கோடி மட்டுமே செலவானதாகவும் ரூ.908 கோடியை முறைகேடாக கணக்கு காட்டியுள்ளதாகவும் 2018-ம் ஆண்டில் அமைப்பு ஒன்றின் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையொட்டி 2020-ம் ஆண்டு வருமான வரித்துறை செட்டிநாடு குழுமத்தில் சோதனை நடத்தியதில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.