உலக கோப்பை வென்றதாக முதல்வர், அமைச்சர்களை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது போலீஸார் வழக்கு

வினோத்பாபு
வினோத்பாபு
Updated on
1 min read

ராமநாதபுரம்: சக்கர நாற்காலி கிரிக்கெட்டில் இந்திய அணி உலக கோப்பையை வென்றதாக முதல்வர், அமைச்சர்களை ஏமாற்றி வாழ்த்து பெற்ற, கடலாடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மீது ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கீழச்செல்வனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர், இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் எனகூறி வந்தார். 2022 டிசம்பரில் கராச்சியில் நடந்த போட்டியில் ஆசிய கோப்பையை வென்றதாகக் கூறி, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், உதயநிதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த மாதம் லண்டனில் நடந்த டி20 உலக கோப்பை சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றதாகக் கூறிய வினோத் பாபு, அது தொடர்பாக கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் இவர் போலியான தகவல்களை தெரிவித்து பலரையும் ஏமாற்றி வருவதாகவும் சென்னை தலைமைச் செயலகத்துக்கு புகார் சென்றது. இதுகுறித்து ராமநாதபுரம் உளவு போலீஸார் நடத்திய விசாரணையில், வினோத் பாபு இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும், வெளிநாட்டுப் போட்டியில் பங்கேற்கப் போவதாககூறி பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் ராமநாதபுரம் ஏபிஜெ மிஷைல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் சரவணக்குமார், எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். அதில், இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறி வினோத் பாபு மோசடி செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்து, இந்திய சக்கர நாற்காலி அணி தலைமை பயிற்சியாளர் எனக் கூறி, ஆனந்தபாக்கியராஜ் என்பவரும், துணை பயிற்சியாளர் எனக் கூறி, முனியசாமி என்பவரும் மோசடி செய்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.

சத்திரக்குடியைச் சேர்ந்த பேக்கரி பங்குதாரர் தினேஷ்குமார் தந்தபுகார் மனுவில், வினோத் பாபு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க லண்டன் செல்ல உதவுமாறு கேட்டார். அவருக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினேன். பண மோசடி செய்த வினோத் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வினோத்பாபு மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in