

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் வழித் தடத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட அரசு, தனியார் பேருந்துகளில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க ரூ.23 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணித்தால் ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அரசு, தனியார் பேருந்துகளில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “மேட்டுப்பாளையம்-கோவை காந்திபுரம் இடையே ரூ.23 பெறுவதற்கு பதில், ரூ.25 பெறுகின்றனர். தனியார் பேருந்துகளில் புதியபேருந்து நிலையத்தில் இறங்கினாலும் இதே கட்டணத்தையே பெறுகின்றனர்.அரசுப் பேருந்துகளில் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கினால் ரூ.22 பெறுகின்றனர். எனவே, அனைத்து பேருந்துகளிலும் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் கேட்டபோது, "நிர்ணயிக்கப்பட்டதைவிட நேற்றுமுன்தினம் கூடுதல் கட்டணம் வசூலித்த 5 பேருந்துகளுக்கும், நேற்று அதிக கட்டணம் வசூலித்த 5 பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்க சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்படும்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும்போது, “நிர்ணயிக்கப்பட்டதை விட அரசுப் பேருந்துகளிலேயே கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்திடம் விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கூடுதல் கட்டணம் ஏன்?: அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க ரூ.25 பெறுவது உண்மைதான். பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணி நடைபெறுவதன் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும்போது 4.30 கி.மீ தூரம் பேருந்து சுற்றி செல்கிறது.
அங்கிருந்து வரும்போது 3.30 கி.மீ சுற்றி வருகிறது. மேம்பால பணி நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள சாலையை சரிசெய்து கொடுத்தால் நேராக செல்ல முடியும். பேருந்து சுற்றிச்செல்லாமல் நேராக சென்றால் பழையபடி ரூ.23 மட்டுமே பெறப்படும். புதிய பேருந்து நிலையத்தை அடிப்படையாக கொண்டு திருத்தப்பட்ட கட்டணத்தையே நாங்கள் பெறுகிறோம்.
தற்போது மேட்டுப்பாளையம் - புதிய பேருந்து நிலையம் இடையே ரூ.22 பெறுகிறோம். பேருந்து நேராக சென்று வந்தால் ரூ.20 மட்டுமே பெறுவோம்” என்றனர்.
யார் இழப்பீடு அளிப்பது?: கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கூறும்போது, “முறைப்படி அனுமதி பெற்று பேருந்துகளில் கட்டணம் வசூலித்தால் எதற்காக போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தி, அபராதம் விதிக்க அறிக்கை வழங்குகின்றனர். விதிமுறைப்படி, மாவட்ட ஆட்சியர் அங்கீகரித்த, பேருந்து கட்டண பட்டியலை பேருந்தில் ஒட்டிவைத்திருக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலும் இதை யாரும் கடைபிடிப்பதில்லை. பேருந்து சுற்றிச் செல்கிறது என்பதற்காக பொதுமக்கள் அந்த சிரமத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. வேண்டுமானால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் இருந்து நஷ்டத்தை பெற்றுக் கொள்ளட்டும். பேருந்து சுற்றிச் செல்வதால் பொதுமக்களுக்கும் தான் சிரமம், அலைச்சல் ஏற்படுகிறது. நேர விரயம் ஆகிறது.
அதற்கு யார் இழப்பீடு வழங்குவது? இன்னும் தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்டேஜ் உருவாக்கி கட்டணத்தை குறைக்காமல் கூடுதல் கட்டணத்தை பெற்றே இயக்கி வருகின்றனர்” என்றார்.