

சென்னை: தமிழக அரசின் மருத்துவச் சுற்றுலா மாநாடு, சென்னையில் நாளை (ஏப்.29) தொடங்கவுள்ளது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக தமிழகம் சார்பில் 2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாடு, சென்னையில் ஏப்.29, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் சார்பில் மருத்துவச் சுற்றுலாவுக்காக முதல்முறையாக மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.குறைந்த செலவில் தரமான மருத்துவச் சேவை வழங்கப்படுவதால் பல்வேறு வெளிநாடுகளின் சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழகம் விளங்குகிறது. எனினும், இடைத்தரகர்களின் இடையூறுகளால் சிறந்த சேவையைபயனாளிகள் பெற முடியாத சூழல் நிலவுகிறது. அதை தவிர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தமாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, மொரீஷியஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பல்வேறு துறைகளில் சிறந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், அயலக தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1.50 கோடி செலவில்கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழாதீவுத்திடலில் இன்று (ஏப்.28) தொடங்கி மே 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் வங்கதேசம், ஈரான் உட்பட 10 நாடுகளின் சார்பில் 30அரங்குகள் இடம் பெறுகின்றன.
ஊட்டியில் மிதவை உணவகம் மற்றும் ஹெலிகாப்டர் சுற்றுலாவைசோதனை முறையில் மேற்கொள்ளஇருக்கிறோம். இவ்வாறு அமைச்சர்கூறினார். பேட்டியின்போது சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர்.