Published : 28 Apr 2023 06:03 AM
Last Updated : 28 Apr 2023 06:03 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று பெரும்புதூர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகவளாக மக்கள் நல்லுறவு மையகூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு நிதிபங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை, மகளிர்திட்டம், பிற துறைகளில் மத்தியஅரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பாரத மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசியபயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வலாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிகள் குறித்தும், பொது சேவை மையங்களில் பயன்பாடு குறித்தும், நெடுஞ்சாலை நீர்வழிப் பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள் குறித்தும், மாவட்டதொழில் மையம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் சுகன்யா பாரத் அபியான் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், பெண்குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட முன்னோடி வங்கி மூலம்செயல்படுத்தும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் வடிகால் பணிகள்: வரும் மழைக்காலத்துக்குள் மழை நீர் வடிவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்து அதனைதுரிதப்படுத்தி பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் சார்பில் மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் மேற்கொள்ள இருக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட மின்சார குழு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுந்தர், செல்வப்பெருந்தகை, சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT