Published : 28 Apr 2023 06:02 AM
Last Updated : 28 Apr 2023 06:02 AM
சென்னை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறை வேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இதுபோன்ற சட்ட முன்வடிவுகளைப் படித்து கருத்து சொல்வதற்குக்கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை.
நிலம் தொடர்பான ஒரு சட்டத்தை கொண்டுவரும் முன்உரிய முறையில், விவாதிக்காமல் அவசர கதியில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டமானது வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், சிறு, குறு விவசாயிகளிடம் உள்ள நிலங்களை அரசு அறிவிக்கும் எந்த திட்டத்துக்கும் வரன்முறையின்றி எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.
அதேபோல் பரந்தூர் விமான நிலையம் உட்பட தமிழக அரசு அறிவித்திருக்கும் சிப்காட் தொழிற்பேட்டை, ஜவுளிப் பூங்காபோன்ற திட்டங்களுக்கும் விவசாயிகளுடைய நிலங்களை, இந்த சட்டத்தின் மூலம் கையகப்படுத்த முடியும். மேலும் நிலம்தொடர்பான உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு, அரசு அமைக்கும் நிபுணர் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்படும். இது ஆபத்தானது.
நீர்நிலைகளை பாதுகாக்க உதவாது: எனவே, தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023, நீர்நிலைகளைப் பாதுகாத்திட எவ்வகையிலும் உதவாது.அதற்குப் பதிலாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்குத் தாரை வார்க்கவும் தான் பயன்படும். எனவே, இச்சட்டத்தை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT