Published : 28 Apr 2023 04:17 AM
Last Updated : 28 Apr 2023 04:17 AM

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாரூர்: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 385 வட்டார மருத்துவமனைகள், 2,400 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

ஆனால், தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில்,பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பெருநகரங்களைத் தவிர, பிற பகுதிகளில் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். அப்போது, சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்படாததே காரணம் என்றும், இதன் காரணமாக மருத்துவர்கள் உள்ளிட்டோர் பணிச் சுமையால் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதன் வெளிப்பாடாக, மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜாவை அண்மையில் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சந்தித்து,

தங்களுக்கு உள்ள பணிச்சுமை குறித்து விளக்கியதுடன், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதுதான் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் கிளைத் தலைவர் பத்மநாபன் கூறியது: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 33 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளிகள் சிகிச்சை வேளை முடிந்து, உள்நோயாளிகள் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சென்ற பிறகுவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரேயொரு மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

மன்னார்குடி மருத்துவமனையைவிட கூடுதலாக நோயாளிகள் வரும் கும்பகோணம், கடலூர் அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் உள்ளது. இதனால், விபத்து, நெஞ்சு வலி, விஷ முறிவுஆகிய சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு அதி தீவிர கவனிப்புடன் சிகிச்சை அளிக்கும் மருத்துவரே, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதற்கான அனைத்து ஆவணங்களையும் எழுத வேண்டியுள்ளது.

இதனால், நேரம் விரயம் ஆவதுடன், மருத்துவர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை உள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.

இது குறித்து சமூக, சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்திரநாத் கூறியது: 1980-க்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை வைத்துக் கொண்டே,இன்னமும் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களையும் நியமனம் செய்வது இனியும் பொருத்தமாக இருக்காது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பமருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துநிலை ஊழியர்களையும் பணியமர்த்த வேண்டும் என்று கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதுடன், தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். புதிய பணியிடங்களை உருவாக்கினால் வேலைவாய்ப்புக்கு மட்டுமின்றி, மக்களின் உயிர் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுத்ததாக அமையும்.

எனவே, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களையும் அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x