Published : 28 Apr 2023 04:17 AM
Last Updated : 28 Apr 2023 04:17 AM
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பை சேகரிப்பது உள்ளிட்ட தூய்மை பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து, மேயர் மு.அன்பழகன் பேசியது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 800 கிமீ தொலைவுக்கு நடைபெற்று வரும் புதை சாக்கடை பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.
இதேபோல, மாநகர் பகுதிகளில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு இன்னும் 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே, இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினைகளை பேசுவதை கவுன்சிலர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: அம்பிகாபதி (அதிமுக): திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள கொட்டப்பட்டு குளத்தில் ஒரு கரையில் மட்டும் பேவர்பிளாக் தளம் அமைக்கப்படுகிறது. அந்த பணியை மற்றொரு கரையிலும் மேற்கொள்ள வேண்டும்.
மேயர்: கொட்டப்பட்டு குளத்தின் 4 கரைகளும் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சங்கர்(சுயேச்சை): திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: திருச்சி மாநகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களை பிடிக்க தற்போது உள்ள 2 வண்டிகள் 5 ஆக அதிகரிக்கப்படும்.
க.சுரேஷ்(இந்திய கம்யூ.): கடந்த நிதியாண்டில் கல்வி நிதிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு செலவிட வேண்டும்.
மேயர்: மாநகராட்சி பகுதிகளில் உள்ள பீமநகர், மார்சிங்பேட்டை, பிராட்டியூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்ட முறையே ரூ.6 கோடி, ரூ.10 கோடி, ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
முத்துக்குமார்(திமுக): புதை சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூலியாக கேட்டுப் பெறுகின்றனர். இதனால், புதை சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பு குறித்து புகார் தெரிவிக்க மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேயர் மு.அன்பழகன்: புதை சாக்கடை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யும்போது, தனிப்பட்ட நபருக்கான பிரச்சினை என்றால் கூலி வசூலித்து கொள்ளலாம். அதே வேளையில் பொது இடத்தில் என்றால் பொதுமக்களிடம் கூலி கேட்கக்கூடாது. மீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநடப்பு: தொடர்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 53-வது தீர்மானத்தில் திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 65 வார்டுகளிலும் உள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 பேரும் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT