

திருவண்ணாமலை: “மத்திய அரசு எதிர்பார்த்த உற்பத்தி இல்லாததால், தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள நியாய விலை கடையில் இன்று மாலை ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் கூட்டுறவு துறையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துறை மூலமாக வேளாண்மை கடனாக 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை கடனாக இல்லாமல் கால்நடை கடன் மற்றும் நகை கடன் உட்பட 17 வகை கடன் வழங்குகிறோம். இந்த வகையில், 82.15 லட்சம் பேருக்கு ரூ.68,495 கோடி கடனாக கடந்தாண்டு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்குகிறது. ரூ.1,500 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது. ரூ.1,900 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலையில் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகளவில் பயன்பெறுகின்றனர்.
இந்தாண்டு ஆரம்ப வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.500கோடியில் கடலெண்ணை தயாரிக்கும் இயந்திரம் உட்பட வேளாண்மை இயந்திரங்கள் வாங்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் கொடுப்பது மட்டும் இல்லாமல், தொழிலில் லாபம் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 வகையான தொழில், அந்தந்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நியாய விலை கடையில் பொருட்கள் எளிதில் கிடைக்க வேண்டும். தரமாக கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 35,941 நியாய விலை கடை உள்ளது. 5,884 கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளது. 3,876 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து இதுவரை 35.29 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 4.36 லட்சம் விவசாயிகளுக்கு 7,891.54 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும், மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கின்றனர் என முதல்வருக்கு புகார் வருகிறது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசு எதிர்பார்த்த உற்பத்தி இல்லாததால் தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு உள்ளது. 2011-ல் இருந்து தமிழகத்துக்கு மண்ணெண்ணை அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது எப்படி என முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தேவையான மண்ணெண்ணை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். பின்னர் அவர், மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவிகளை வழங்கினார். அப்போது ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.