

சென்னை: அதிமுக ஆட்சியில் நிலக்கரி கொண்டு வந்ததில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சியில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ( TANGEDCO ) அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதில் டிஜிட்டல் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.