

சென்னை: குட்கா, பான்மசாலா, புகையிலை தடை ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
2013-ம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு வந்த குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை தொடர்பான தடையாணை, தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்கிடையே புகையிலைப் பொருட்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை ஆணையரால் விதிக்கப்பட்ட தடை ஆணையை கடந்த ஜனவரி 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றுக்கான தடையாணை நீடிப்பதாகவும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "போதை பொருட்கள் மீதான தடை நீடித்து வருவதால், மேலும் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை காலை 10 மணிக்கு மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில், போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
கடத்த ஆட்சியில் குட்கா போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதாக சட்டப்பேரவையில் ஆதாரங்களோடு தெரிவித்தோம். விற்பனையை தடுக்காமல், திமுக உறுப்பினர்களின் பதவியை பறிப்பதற்கான முயற்சியில் முதல்வரும், பேரவைத் தலைவரும் ஈடுபட்டனர். ஆனால் திமுக அரசு அதுபோல இல்லாமல், தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, விற்பவர்களை கைது செய்வது, கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.