

சென்னை: திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் சர். பிட்டி. தியாகராயர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,"திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள்! மாணவர்க்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்! அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழகத்தின் நலன் காக்க உழைப்போம்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முன்னதாக, ரிப்பன் மாளிகையில் உள்ள சர். பிட்டி. தியாகராயர் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.