போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்தால் குற்ற நடவடிக்கை - தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரகம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பு.க.பிரவீன்
தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை மீறி அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரகம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: அரசு பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் நலத் துறை எச்சரித்துள்ளது.

விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிக்கும் பணிகளை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிஐடியு தொழிற்சங்கத்தினர், வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்திருந்தது.

பேச்சுவார்த்தை: அதன்படி, சென்னை, தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கட்டிடத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர் தனி இணை ஆணையர் வேல்முருகன், 8 போக்குவரத்துக் கழகங்கள் தரப்பிலானஅதிகாரிகள், சிஐடியு சார்பில்தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தலைமையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இப்பேச்சுவார்த்தையில், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், நியமனத்தில் ஏற்கெனவே உள்ள நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தொழிற்தகராறு சட்டப்படி நிர்வாக இயக்குநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கோரும் மனு தொழிற்சங்கத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

எச்சரிக்கை: தொழிலாளர் நலத்துறை தரப்பில், ‘‘ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். நியமனத்தில் பழைய நடைமுறை தொடராவிட்டால், குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், குறைந்தபட்ச கூலி சட்டத்தைப் பின்பற்றுமாறு அனைத்து நிர்வாக இயக்குநர்களுக்கும் தொழிலாளர் துறை கடிதமும் அனுப்பியது. அடுத்தகட்டமாக மே 5-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் நிர்வாக இயக்குநர்கள் கலந்துகொள்ளவேண்டும் என தொழிலாளர் நலத்துறை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையை மீறி ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களைநியமிக்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in