Published : 27 Apr 2023 05:57 AM
Last Updated : 27 Apr 2023 05:57 AM

சூடான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறை - தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: சூடான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வரும் பணிக்காக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலத் துறை ஆணையரகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூதரகங்களுக்கு கடிதம்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள், பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்களை மீட்கக் கோரி தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, சூடானில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்கக் கோரியும், தமிழக அரசு சார்பில் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு: மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில்உள்ள இந்தியத் தூதரகத்துக்குஉடனுக்குடன் தெரியப்படுத்தப் படுகிறது.

தற்போது மத்திய அரசின் `ஆபரேஷன் காவிரி' மூலம், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் டெல்லி, மும்பைக்கு அழைத்துவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யா-உக்ரைன் போரின்போது, விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு மீட்கப்பட்ட தமிழர்கள், தமிழக அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோல, தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொலைபேசி எண்கள்: டெல்லியில் தமிழ்நாடு இல் லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 011-2419 3100, 9289516711 ஆகிய எண்கள், tnhouse@nic.in இணையதளம் வாயிலாகவும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டு அறையை 91-96000 23645 மற்றும் nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x