

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராகபதவியேற்ற பின் முதல் முறையாக பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து அமித் ஷாவிடம் பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், திமுகவின் கூட்டணி பலம், தமிழக பாஜக - அதிமுக இடையே சமீபத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், கர்நாடக தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பெற்றுத் தந்து பாஜக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமாறு பழனிசாமியிடம் அமித் ஷா கூறியதாகவும், பாஜக வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக பழனிசாமி உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் அதிமுக உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது தொடர்பாகவும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், என்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.