Published : 27 Apr 2023 06:20 AM
Last Updated : 27 Apr 2023 06:20 AM

விஏஓ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது - சொந்த ஊரில் உடல் அடக்கம்

தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் இறுதி அஞ்சலி செலுத்தினார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் முறப்பநாட்டில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த 2 நபர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இருவரும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக லூர்து பிரான்சிஸ் கடந்த 13-ம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் நேற்று முன்தினமே கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே நேற்று காலை மாரிமுத்து(35) கைது செய்யப்பட்டார்.

லூர்து பிரான்சிஸ் உடல் நேற்று காலை அவரது சொந்த ஊரான சூசைபாண்டியாபுரம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மணல் கடத்தல் தொடர்பாக லூர்து பிரான்சிஸ் கடந்த 13-ம் தேதி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x